அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி.. 20 லட்சம் மக்கள் பாதிப்பு.. உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என தகவல்
அமெரிக்காவை மில்டன் புயல் தாக்கியதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் மூழ்கினர்.
அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, சூறாவளி பாதித்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர் உள்பட ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி சென்றது. இதன்பின்னர் இந்த சூறாவளி வலுவிழந்தது. இதனால், மணிக்கு 165 கிலோமீட்டர் என்ற அளவில் காற்றின் வேகம் குறைந்தது.
சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது. ஆர்லேண்டோவுக்கு தென்மேற்கே 60 மைல்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால், புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் சிலர் உயிரிழந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு 11 மணியளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். சூறாவளியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
I am scared just looking at it, it is a very scary scene, this is the scene of the storm that hit Florida, I pray for the people of Florida..🙏🙏#Milton #Florida #FloridaStorm #FloridaFlooding #Flood #HurricaneMilton #HurricanMilton #Hurricane #MiltonFlorida #Trending #video pic.twitter.com/g8SiOXEDfJ
— Congressiya (@congressiya21) October 10, 2024
இதனால், மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்பட கூடும். அமெரிக்காவில், சமீபத்தில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 6 மாகாணங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் கத்ரீனா சூறாவளி தாக்கியதில் 1,400 பேர் வரை உயிரிழந்தனர்.