அதிக சம்பளம்.. போரில் கொல்லப்பட்ட இந்தியர்.. வேலைக்காக அழைத்து சென்று ராணுவத்தில் சேர்த்த கொடூரம்!

 
Russia

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து, நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றுவதும், முறையான பயிற்சி இல்லாமல் பலர் சிக்கி தவித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில், முகமது அப்சான் என்ற ஐதராபாத்தை சேர்ந்த இளைஞரும் ஒருவர். வேலைக்காக சென்ற அவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்து உள்ளார்.

அவருடைய மறைவை இந்திய தூதரகம் இன்று உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளது. எனினும், அவருடைய மரணத்திற்கான காரணம் அல்லது ரஷ்யாவில் என்ன வேலையில் ஈடுபட்டார் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Russia

ரஷ்யாவில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசை காட்டி வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டது. இதில், தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இருந்து பலர் சென்றனர். ஆனால், பின்னர் அவர்கள் போரில் கட்டாயத்தின்பேரில் ஈடுபடுத்தப்பட்டனர் என தகவல் தெரிவிக்கிறது.

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ஒன்றிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியொன்றில், ரஷ்யாவில் சிக்கி கொண்ட 20 இந்தியர்கள், இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அவர்களை சொந்த நாட்டுக்கு கொண்டு வரவேண்டிய பணிகளை சிறந்த முறையில் செய்து வருகிறோம் என தெரிவித்தது.


காவல் பணியில் அதிக சம்பளம் என வாக்குறுதி கொடுத்து துபாயை அடிப்படையாக கொண்ட பைசல் கான் என்பவர் உதவியுடன் பலர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக பைசல் கான், தலா ரூ.3 லட்சம் பெற்றிருக்கிறார். இதன்பின்பு சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட்டு அவர்கள் போரில் தள்ளப்பட்டனர்.

இந்தியர்க்ளுக்கு ஆயுதங்களை கையாளும் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன. பின்பு, உக்ரைனின் கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களை சுற்றி பணியமர்த்தப்பட்டனர் என தெரிய வருகிறது. அவர்கள் ரஷ்ய ராணுவத்திற்காக வேலை செய்கின்றனரா? அல்லது வாக்னர் என்ற கூலிப்படை அமைப்புக்காக பணியாற்றுகிறார்களா? என்பதும் தெரிய வரவில்லை.

From around the web