கென்யாவில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. 32 பேர் பலி!

 
Kenya

கென்யாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கணமழையால் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவியது. இதனால் கரையோரங்களில் வசித்து வந்த 2 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

Kenya

இந்த நிலையில் கென்யாவில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து கட்டாறு போல தாழ்வான பகுதிகளுக்கு பாய்ந்தோடியது. இதனால் குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமாகின. மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு அடித்து செல்லப்பட்டன. 

இந்நிலையில் கென்யாவில் வெள்ளப்பெருக்கில் மூழ்கி 32 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த மழை, வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட தலைநகர் நைரோபியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.


இதனிடையே கென்யா வானிலை ஆய்வு மையம் இன்னும் நாட்டின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

From around the web