காரணமில்லாமல் மகளுக்கு தொல்லை.. தாய்க்கு 6மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
South Korea

தென் கொரியாவில் தனது மகளை காரணமில்லாமல் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தற்காக தாய்க்கு 6 மாத சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு மோசமான குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளதாகவும் தொடர்ந்து அவரை போனில் அழைத்து தொல்லை கொடுத்ததாகவும் தேவையில்லாமல் அடிக்கடி அவரது வீட்டிற்கு வருவது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்ட தொல்லைகள் அனைத்தும் 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மே மாதம் வரையில் நடைபெற்றுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த தாய், தனது மகளுக்கு மட்டுமே 306 குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, அதை அவர் படித்தாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல, 111 தடவை போனில் அழைத்துள்ளார். ஆரம்பத்தில் அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் எல்லாம் சாதாரணமாகவே இருந்துள்ளன. ஒழுங்காக பைபிள் படி, மகள் வீட்டில் தங்கிக் கொள்வதற்கு விசாரிப்பு போன்ற விஷயங்களைத்தான் அனுப்பியிருக்கிறார்.

SK

ஆனால் நாட்கள் செல்லச் செல்லத்தான் அவரது மகள் எந்த செய்திக்கும் ஒழுங்காக பதிலளிக்காததால், தாய் அனுப்பிய குறுஞ்செய்தியில் கொஞ்சம் வெறுப்பு மெல்ல எட்டிப் பார்க்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் சொந்த மகளின் பாலியல் நடத்தையை கூட அந்த தாய் இழிவாக பேசும் நிலைக்குச் சென்றார். இந்த சமயத்தில் தனது மகள் எங்கே செல்கிறாள் என்று பார்ப்பதற்காக அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றுள்ளதாகவும், பிரச்சனை பெரிதான பிறகு மகளின் வீட்டிற்கு மட்டுமே 8 முறை வந்துள்ளதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் எட்டிப் பார்ப்பது போன்ற அச்சுறுத்தல் குற்றச்சாட்டும் இவர் மீது நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீசார் எச்சரித்தப் பிறகும் கூட, தனது மகளின் வீட்டிற்கு ஆறு முறை சென்றுள்ளார். தான் எந்தவொரு உள்நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும் முன் கூட்டியே திட்டமிட்டு இவை எதையும் செய்யவில்லை என்றும் நீதிமன்றத்தில் தாய் கூறினாலும், இவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. 

SK

சொந்த மகளாகவே இருந்தாலும் இவர் செய்தது அனைத்து குற்றம் என்று கூறிய நீதிமன்றம், ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஒருவரை அனுமதியில்லாமல் துரத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஸ்டாக்கிங் குறித்த 40 மணி நேர கல்வியையும் பெற வேண்டும் என தாய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் விசித்திரம் என்னவென்றால், இவ்வுளவு நடந்த பிறகும் தாய்க்கும் மகளுக்கும் எதனால் பிரச்சனை ஏற்பட்டது, ஏன் தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்புவதை மகள் நிறுத்திக் கொண்டாள் என்பதற்கான தெளிவான தகவல் இதுவரை தெரியவில்லை.

From around the web