ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை.. 3வது முயற்சியில் படுகொலை!

 
Hamas

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.

ஈரானில் புதிய அதிபர் பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இஸ்மாயில் வந்திருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இஸ்மாயில் மற்றும் அவருடைய மெய்பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனை ஹமாஸ் உறுதி செய்திருக்கிறது.

இந்த கொலை தொடர்பாக ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “நமது தலைவர் முஜாஹித் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய ஈரானிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேலின் துரோகிகளால் நமது தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்” என தெரிவித்திருக்கிறது.

Hamas

அதேநேரம் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹமாஸ் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் பாலஸ்தீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்திருக்கிறார். ஹஸேம், அமீர் மற்றும் முகமது எனும் இவருடைய மூன்று மகன்கள், கடந்த ஏப்ரல் 10 அன்று இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நான்கு பேரக்குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.

Hamas

இப்படி இருக்கையில் இவருடைய படுகொலை மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சர்வதேச அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் தயாராகி வந்த நிலையில், இந்த படுகொலை போரை மேலும் கோரமாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அதரவு அமைப்பான ஹிஸ்புல்லா தலைவர் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web