பெரும் சோகம்.. பிரேசிலில் கனமழைக்கு 90 பேர் பலி.!!
பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 90 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மேலும் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 3.5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கின்றனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏற்கனவே 85 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடலை மீட்பு படையினர் கைப்பற்றினர். இதன்மூலம் அங்கு வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது.
உருகுவே மற்றும் அர்ஜென்டினாவின் எல்லையில் உள்ள மாகாணத்தில், பதிவான மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 132 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 361 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.