பிரம்மாண்ட விழா... இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூட்டிக்கொண்ட 3-ம் சார்லஸ்!!

 
Charles III

இங்கிலாந்தின் புதிய மன்னராக 3ம் சார்ல்ஸ்சின் முடிசூட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இங்கிலாந்து அரசின் புதிய மன்னராக 3-ம் சார்ல்ஸ் முடிசூட்டிக்கொண்டார். 70 ஆண்டு காலமாக பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3-ம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்டபோதிலும் அவரின் முடிசூட்டு விழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 3-ம் சார்ல்ஸ்சின் முடிசூட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 74 வயதான 3-ம் சார்லஸ்சுக்கு மன்னராக முடிசூட்டப்பட்டது. விழாவில் அவருடன் மனைவி கமிலா உடன் இருந்தார். இதற்காக லண்டன் நகரமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

Charles III

உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 2,300 விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தங்கர் விழாவில் பங்கேற்றுள்ளார். விழாவில் அரச குடும்பத்தை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். பிரிட்டன் நாட்டின் பிரதமரான ரிஷி சுனக் விழாவில் பைபிள் வாசித்தார். முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சனும் விழாவில் பங்கேற்றார்.


மாணிக்கங்கள், செவ்வந்திகள், சபையர்கள் போன்ற 444 விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஊதா நிற வெல்வெட் துணியால் உருவாக்கப்பட்ட செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை மன்னரான சார்லஸ் III க்கு சூட்டினர். விழாவிற்காக உலக தலைவர்கள் லண்டனில் திரண்டுள்ளதால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

From around the web