பேச மறுத்த காதலி.. குத்திக்கொலை செய்து சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்த காதலன்.. அதிர்ச்சி வீடியோ!

 
Ajman

அஜ்மானில் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை காதலன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜ்மான் தொழிற்பேட்டை பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆசிய நாட்டைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் காதல் விவகாரம் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆசை ஆசையாக காதலித்த தனது காதலி தன்னிடம் பேசாததால் கடந்த சில நாட்களாக வாலிபர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சூப்பர் மார்க்கெட்டில் வாலிபர், தனது காதலியிடம் ஏன் பேசாமல் விலகி செல்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Murder

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது காதலியை சரமாரியாக குத்தினார். இதில் இளம்பெண் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் குத்திகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனே இளம்பெண்ணை கொன்ற வாலிபரை பிடிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வாலிபர் கத்தியால் ஊழியர்களை சரமாரியாக குத்தினார். இதில் 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் ஆத்திரம் தீராத வாலிபர் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கும் தீ வைத்தார். இது குறித்து சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அஜ்மான் போலீசார் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் காயம் அடைந்த 3 ஊழியர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சூப்பர் மார்க்கெட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இதுகுறித்து அஜ்மான் போலீசின் செயல்பாட்டுத்துறை துணை இயக்குனர் சயீத் அலி அல் மதனி கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை குத்திக்கொலை செய்த வாலிபரை 10 நிமிடத்தில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணை காதலித்ததாகவும், அவர் பேச மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார் என்று கூறினார்.

From around the web