மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம்.. மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

 
USA

அமெரிக்காவில் நோயாளி ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் வேமவுத் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமன் (62). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் போஸ்டனில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு சில வருடங்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டது. உடல்நிலை மோசமடையவே, 2018-ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வேறு ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை அவருக்கு பொருத்தினர். ஆனால், 5 ஆண்டுகளில் அந்த உறுப்பு செயலிழந்தது. இதனால் மீண்டும் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதன்பின்னர், இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று கடந்த 16-ம் தேதி நோயாளி ரிச்சர்டு ஸ்லேமனுக்கு பொருத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்து, நோயாளி குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Operation

இதன்மூலம் நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உறுப்புகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்களை அகற்றவும், மனிதர்களுக்கு பொருந்தக்கூடிய தன்மையை மேம்படுத்தவும், சில மனித மரபணுக்களைச் சேர்ப்பதற்காகவும், பன்றியின் மரபணுவில் இஜெனிசிஸ் நிறுவனம் சில மாற்றங்களை செய்திருந்தது. மேலும், மனிதர்களை பாதிக்கக்கூடிய வகையில் பன்றியின் பாகங்களில் இருந்த வைரஸ்களையும் செயலிழக்க செய்தது.

அதன்பின்னர் அந்த பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை குரங்குகளுக்கு வெற்றிகரமாக பொருத்தி சோதனை செய்துள்ளனர். இதில், அந்த குரங்குகள் சராசரியாக 176 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளன. ஒரு குரங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதன்பிறகே அத்தகைய சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.

Pig

உறுப்பு பரிமாற்றம் மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கிணைக்கும் யுனைடெட் நெட்வொர்க் பார் ஆர்கன் ஷேரிங் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, ஒரு உறுப்புக்காக காத்திருக்கிறார்கள். குறிப்பாக சிறுநீரகங்களுக்கு அதிக தேவை உள்ளது.

2022-ல் 57 வயது நிரம்பிய இதய நோயாளிக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிசிக்சையை, மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்டனர். ஆனால், அந்த நோயாளி இரண்டு மாதங்களில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web