4வது நாளாக பற்றி எரியும் பிரான்ஸ்.. பயணத்தை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்!!

 
France

பிரான்சில் 17 வயது சிறுவன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தையடுத்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் விதிமீறி செயல்பட்டார் என்பதற்காக நீல் (17) என்ற சிறுவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். இந்த சம்பவம் குறித்து தெரிந்ததும், மக்களிடையே கடும் கொந்தளிப்பு எழுந்தது. 

பிரான்ஸ் முழுவதும் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவற்றில் கடந்த 28-ம் தேதி இரவு பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.

France

இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என கூறியுள்ளார். வன்முறை சம்பவத்தில் 24 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். 40 கார்கள் தீக்கிரையாகி உள்ளன. இதனால், வன்முறை தொடர்ந்து பரவி விடாமல் தடுப்பதற்காக 2 ஆயிரம் கூடுதல் காவல் அதிகாரிகள் நேற்று குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், அமைச்சர்கள் மட்டத்திலான நெருக்கடி பிரிவினர் கலந்து கொண்ட கூட்டத்தில் தலைமையேற்று நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இதன்பின்னர் அவர், மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கையாக கேட்டு கொண்டார். பள்ளிகள், காவல் நிலையங்கள், குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாதது என்று கூறினார்.


அமைதியை திரும்ப கொண்டு வர பணியாற்றியவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். நிலைமையை கவனத்தில் கொண்டு மூத்த மந்திரிகளுடனும் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். போராட்டத்திற்கான உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாத்திருக்கிறோம். ஆனால், நல்லிணக்கம் மற்றும் கூட்டு நல்லெண்ணம் ஆகியவை அதிக தேவையாக உள்ளது என்று அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.

பாரீசில் வன்முறை பரவியதில், 170-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

From around the web