சிறுவன், சிறுமியர் உள்பட 4 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்.. பரபரப்பு வீடியோ!
அயர்லாந்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் சிறுவன் சிறுமியர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்லின் நகரில் உள்ள சிட்டி சென்டர் துவக்கப்பள்ளிக்கூடம் அருகே நேற்று மதியம் 1.30 மணியளவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அயர்லாந்திற்கு புலம்பெயர்ந்த அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபரால் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன், 30 வயது பெண் என மொத்தம் 4 பேர் காயமடைந்தனர். இதில், சிறுவனின் வயது 5, ஒரு சிறுமியின் வயது 5 மற்றொரு சிறுமியின் வயது 6 ஆகும். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த 5 வயது சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதேவேளை, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது அல்ஜீரியாவில் இருந்து அயர்லாந்துக்கு புலம்பெயர்ந்த நபர் என தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அயர்லாந்து மக்கள் நூற்றுக்கணக்கானோர் நகரின் முக்கிய பகுதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் முயற்சித்தனர்.
No immigrants destroying Dublin tonight, just a bunch of utter scumbags pretending they want to ‘save’ Ireland. Pull their hoods down, the masks off & shame every single one of them. Jail is too good. A medieval public arse flogging perhaps. #Scumbags
— Steve Wall (@stevethewall) November 23, 2023
pic.twitter.com/kdDECqXNTe
அப்போது, பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து பேருந்து, கார்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். அதேவேளை, இந்த வன்முறை நிகழ்வுகளை சாதகமாக பயன்படுத்தி சிலர் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடுத்து சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அதிக அளவில் அயர்லாந்தில் புலம்பெயர அரசு அனுமதிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளபோதும் டப்லின் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.