துருக்கியை தொடர்ந்து.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு! மக்கள் பீதி

 
Japan

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. 

துருக்கி நாட்டில் கடந்த 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகள் முடிந்து தற்போதுதான் மறுகட்டமைப்பு பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. இருந்தாலும் மற்றொரு பக்கம் நிலநடுக்கம் அவ்வப்போது துருக்கியை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. நேற்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று (பிப். 25) ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடா தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நெமுரா தீபகற்ப பகுதியில் 61 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Earthquake

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஹொக்கைடா மாகாணத்தில் கடந்த திங்கள் கிழமைதான் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அதேபோல், காயம் எதுவும் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

ஜப்பான் நேரப்படி இரவு 10.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் அடுத்த ஒருவாரத்திற்கு அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் பகுதியான பசிபிக் ரிங் ஆப் பயர் என்ற இடத்தில் ஜப்பான் அமைந்து இருப்பதால் அந்த நாட்ட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எனவே நிலநடுக்கத்தால் அதிகம் சேதம் அடையாத வகையிலான கட்டிடங்களே ஜப்பானில் கட்டப்படுகின்றன.


இதை உறுதி செய்வதற்காக ஜப்பானில் கட்டுமான ஒழுங்குமுறை விதிகளும் மிகக் கடுமையாக உள்ளன. அதேபோல், சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் வகையிலான அவசரகால பயிற்சிகளையும் அந்த நாட்டில் மீட்பு குழுவினர் அடிக்கடி எடுத்து வருவதுண்டு. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகக்த்தை தொடர்ந்து, நியூசிலாந்து, இந்தோனாசியா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவு காரணமாக அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் மக்கள் மத்தியில் சற்று கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web