சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 15 பேர் உடல் கருகி பலி.. பரபரப்பு வீடியோ!

 
China

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதே நேரம், பலரும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர்.

china

இந்த தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியான நிலையில் 44 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதனிடையில் நகர மேயர் சென் ஜிசாங், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web