அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ.. 43 பேர் உடல் கருகி பலி.. வங்கதேசத்தில் நடந்த கோரம்!

 
Bangladesh

வங்கதேசத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43  பேர் உயிரிழந்துள்ள சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கச்சிபாய் உணவகத்தில் தீப்பிடித்தது. உணவகத்தில் பற்றிய தீ அந்த கட்டிடத்தின் வழியாக வேகமாக ஏழு மாடிக்கும் பரவியது.

Bangladesh

இரவு நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.  இதனால் நெருப்பு சூழ்ந்ததை அவர்களால் அறிய முடியவில்லை. வேகமாக பரவிய நெருப்பு மற்றும் புகைக்குள் அங்கு குடியிருந்தவர்கள் வசமாக சிக்கிக் கொண்டனர். இதனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி  தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்தில் உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் பலரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டும்,  தீயில் கருகியும்  பெண்கள் குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பில் வசித்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மருத்துவமனை வளாகங்களில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச சுகாதார அமைச்சர் சமந்தா லால் மற்றும் அரசு அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

From around the web