நிதி நெருக்கடி.. விருப்பமான ஜெட் விமானத்தை விற்ற முன்னாள் அதிபர் டிரம்ப்!

 
Trump

நிதி நெருக்கடியை சமாளிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுவிட்டாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், கோடீஸ்வரருமான டொனால்டு டிரம்ப், ரியல் எஸ்டேட், ஓட்டல் என எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். 2017 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் படுதோல்வியை தழுவினார். 

அதிபர் பதவியை இழந்தது முதல் டிரம்ப் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒரு சில வழக்குகளில் டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதவிர அடுத்தடுத்து தொடரப்படும் வழக்குகளால் டிரம்பின் பல தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. 

Jet

இதனிடையே தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள டிரம்புக்கு ரூ.800 கோடி வரை தேவைப்படும் என அவரது சட்ட நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க டிரம்ப் தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுவிட்டாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.83 கோடி) மதிப்புடைய 1997 செஸ்னா ஜெட் விமானத்தை ஈரானிய - அமெரிக்க கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான மெஹர்தாத் மொயதியிடம் டிரம்ப் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 

Trump

எனினும் என்ன தொகைக்கு விமானம் விற்கப்பட்டது என்கிற தகவல் வெளியாகவில்லை. இந்த மெஹர்தாத் மொயதி, கடந்த 2020 தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்துக்காக 2.45 லட்சம் டாலர் (சுமார் ரூ.2 கோடி) நன்கொடையாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web