ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து.. 51 பேர் பலியான சோகம்!

 
Iran

ஈரான் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

Iran

இதுகுறித்து தகவல் அறிந்த அவசரகால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களும் வெளியே கொண்டுவரப்பட்டன. சுரங்கத்துக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாவது, நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2017ம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web