திருமணம் செய்ய மறுத்த முன்னாள் காதலி.. கத்தியால் குத்திய இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை.. இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

 
UK

திருமணம் செய்துகொள்ள மறுத்த முன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சோனா (23). இவர் 2017-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்றார். அப்போது அதே கல்லூரியில் படித்த ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லா (23) என்பவரும் சோனாவும் காதலித்து வந்தனர். பின்னர், இருவரும் மேல்படிப்பிற்காக கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றனர். கிழக்கு லண்டனில் உள்ள கல்லூரியில் இருவரும் மேற்படிப்பு படித்தனர். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே சோனா கிழக்கு லண்டனில் உள்ள ஐதராபாத் வாலா என்ற உணவகத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.

இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீராமை விட்டு விலக சோனா முடிவெடுத்தார். ஆனால், சோனாவை ஸ்ரீராம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஸ்ரீராம் சோனாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சோனா மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், காதலை முறித்துக்கொண்ட சோனா ஸ்ரீராமிடம் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.  

murder

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி சோனா வேலை செய்யும் உணவகத்திற்கு வந்துள்ளார். அங்கு சோனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்ரீராம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஸ்ரீராம் உணவகத்தில் இருந்த கத்தியை எடுத்து சோனாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

கை, வயிறு, மார்பு, முதுகில்  9 முறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சோனா சரிந்து விழுந்தார். தாக்குதல் நடத்திய ஸ்ரீராம் லண்டன் போலீசில் சரணடைந்தார். படுகாயமடைந்த சோனாவை மீட்ட உணவக ஊழியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 6 அறுவை சிகிச்சைகள் பெற்று சோனா குணமடைந்தார்.

Sriram

இந்நிலையில், திருமணம் செய்ய மறுத்ததால் முன்னாள் காதலியை கத்தியால் குத்திய ஸ்ரீராம் கைது செய்யப்பட்டு அவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், குற்றவாளி ஸ்ரீராமுக்கு 16 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

From around the web