எலான் மஸ்க் - ட்ரம்ப் மோதலா? இந்தியர்களுக்கு H1B விசா கிடைக்குமா?
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ம் தேதி தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்க உள்ளார். அதிபராக மீண்டும் வெற்றி பெற்ற ட்ரம்ப், அரசு நிர்வாகத்தை திறம்பட மேம்படுத்துவதற்காகவும் அரசு செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எக்ஸ் தளம், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி இருவரையும் சிறப்பு செயல் அதிகாரிகளாக நியமித்துள்ளார்.
விவேக் ராமசுவாமி அமெரிக்கர்களின் கலாச்சாரம் புதிய பொறியியல் வல்லுனர்களை உருவாக்குவதற்கு ஏதுவாக இல்லை என்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே அமெரிக்க கலாச்சாரம் மிகவும் நன்றாகவே உள்ளது என்றார். மேலும் ட்ரம்ப் ஆதரவாளர்களே விவேக் ராமசுவாமிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆண்டு தோறும் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்காக வழங்கப்படும் ஹெச்.1.பி விசாவின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்தற்கும் ட்ரம்ப் விசுவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர் மற்றும் புதிய தொழில்நுட்ப வேலைகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதா? அமெரிக்கர்களுக்கே இந்த வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுப்புகின்றனர். நிக்கி ஹாலேவும் ட்ரம்ப் ஆதரவாளார்களின் கருத்துக்களையே சொல்லியுள்ளார். அமெரிக்கர்களின் வேலைகளுக்காகத் தான் அரசு செயல்படுவேண்டுமே ஒழிய வெளிநாட்டவர்களுக்கு வேலை வழங்குவதற்காக அல்ல என்று நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
எலான் மஸ்க் 65 ஆயிரத்திலிருந்து 130 ஆயிரம் என ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் விசாக்கள் நிறுவனத்தினுடன் இணைத்து இருப்பதை விடுவித்து ஊழியர்களுடன் இணைக்க வேண்டும். அதனால் ஊழியர்கள் எந்த நிறுவனத்திற்கும் பணிமாற்றம் எளிதாக செய்து விடலாம் என்று விசா சட்டத் திருத்தம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் ஹெச்1 பி விசா சீர்திருத்தம் பற்றி அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்ட போது, அமெரிக்காவில் திறமையானவர்கள் வேண்டும் என்ற என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் ஏன் வரவில்லை என்று எலான் மஸ்க் க்கு பதிவிட்டும் இருந்தார். எலான் மஸ்க்கும் விழாவில் பங்கேற்று ட்ரம்பிடம் உரையாடிச் சென்றுள்ளார்.
ஆக, ஹெச் 1 பி விசா சீர்திருத்தத்தில் எலான் மஸ்க்கின் எண்ணத்தை ஆமோதிக்கும் வகையிலேயே ட்ரம்ப் நடந்து கொண்டதால், ஹெச்1 பி விசா எண்ணிக்கை இரட்டிப்பாகவும் மேலும் நிறுவனத்துடன் இணைத்து இருக்கும் விதியை தளர்த்தவும் பெரும் வாய்ப்புகள் உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் இந்தியர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!