எக்ஸ் ஏஐ நிறுவனத்துடன் இணைத்த எலான் மஸ்க்!! எக்ஸ் தளத்தின் விலை என்ன தெரியுமா?

சமூகத்தளத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றினார். விரைவில் பயனாளர்களும் எக்ஸ் தள பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் எக்ஸ் ஏஐ என்ற செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தையும் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பாக Grok AI வந்துள்ளது. தமிழில் சக்கைப் போடு போடும் Grok AI தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. என்ன கேள்வி கேட்டாலும் அசராமல் உண்மையைப் போட்டுடைப்பதில் இன்றைய நாளில் Grok AI தான் முதலிடத்தில் உள்ளது.
தற்போது எக்ஸ் ஏஐ நிறுவனத்துடன் எக்ஸ் தள நிறுவனத்தை இணைத்துள்ளார் எலான் மஸ்க். எக்ஸ் தள நிறுவனத்திற்கு 33 பில்லியன் டாலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் ஏஐ நிறுவனம் 80 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்டன. இனி எக்ஸ் ஏஐ நிறுவனமே எக்ஸ் தளத்தை மேலாண்மை மற்றும் ஏஐ தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களைச் செய்யும்.
ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கும் போது அவருக்கும் சமூகத்தளத்திற்கும் என்ன தொடர்பு? பணத்திமிரில் ஆட்டம் போடுகிறார் என்றெல்லாம் வசைப்பாடினார்கள். இந்த எதிர்காலத் திட்டங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளார் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.