பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்! 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்?

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்க உள்ளார். அமெரிக்க காலை நேரம், இந்தியாவின் மாலை நேரப்படி இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. காலையில் முதல் பணியாக வெள்ளை மாளிகை அருகே உள்ள தேவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் வெள்ளை மாளிகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் தேநீர் விருந்து. அதன் பின்னர் அமெரிக்கப் பாராளுமன்ற கட்டிடத்திற்கு ஜோ பைடனுடன் செல்கிறார் ட்ரம்ப்.
பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.பின்னர் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அதே வளாகத்தில் உள்ள அதிபர் அலுவலக அறைக்குச் சென்று அதிபராக கையெழுத்திடுகிறார் ட்ரம்ப். அதிபர் ட்ரம்ப்பின் முதல் உரையைத் தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு வெள்ளை மாளிகை செல்லும் ட்ரம்ப், அங்கே உள்ள ஓவல் அலுவலகத்தில் கையெழுத்திடுகிறார். பல்வேறு ஆணைகளிலும் ட்ரம்ப் கையெழுத்திட உள்ளார்.
சட்டபூர்வமற்ற முறையில் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவது தொடர்பான ஆணையில் புதிய அதிபர் ட்ரம்ப் முதல் நாளிலேயெ கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆணைக்காக, சொந்த நாடு திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 18 ஆயிரம் பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
புதிய அதிபர் ட்ரம்ப் இந்த ஆணையில் கையெழுத்திடும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டபூர்வமற்ற முறையில் நுழைந்த 18 ஆயிரம் இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் இந்தியா அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் இப்படி திருப்பி அனுப்பப்படுகிறவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டபூர்வமற்ற முறையில் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை திரும்பப் பெறாத நாட்டின் மீது பொருளாதாரத் தடை, கூடுதல் இறக்குமதி வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க புதிய அதிபர் தயங்க மாட்டார் எனவும் தெரிகிறது.