அமெரிக்காவில் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நாய்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் ‘பார்க்’ என்ற நிறுவனத்தின் சார்பில் புதிதாக ‘பார்க் ஏர்லைன்ஸ்’ என்ற விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக நாய்களுக்கான சொகுசு விமான பயணத்தை வழங்குகிறது. இந்த புதிய விமான சேவை மே 23-ம் தேதி துவங்கியது. நியூ யார்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதுகுறித்து பார்க் ஏர் நிறுவனம் கூறுகையில், “முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.
BARK AIR: A new airline is creating luxury experiences for people and their pups. Check out BARK Air. pic.twitter.com/4vpHiL7D3q
— Local News 8 (@localnews8) May 25, 2024
சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.