அமெரிக்காவில் திமுக முப்பெரும் விழா! உற்சாகமாகப் பங்கேற்ற அமெரிக்கத் தமிழர்கள்!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில், அமெரிக்க அயலக தி.மு.க. தெற்கு மண்டலம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஆகியோரின் பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்க நாள் மற்றும் அமெரிக்க அயலக தி.மு.க.வின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

முப்பெரும் விழா நிகழ்ச்சிகளில் முதலாவதாக, பெரியாரின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளானோ (Plano) நகரில் உள்ள ஆர்பர் ஹில்ஸ் நேச்சர் பிரசர்வ் (Arbor Hills Nature Preserve) பகுதியில் பெரியார் ஓட்டம்/நடை (Periyar Run/Walk) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்று, பெரியாரின் கொள்கைகளை நினைவு கூர்ந்தனர்.பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு டி-ஷர்ட்டுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
ஓட்டப்பந்தயத்திற்குப் பிறகு, முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் பிளானோ (Plano) நகரிலுள்ள பார் லைப்ரரி (Parr Library)யில் தொடர்ந்தது. இந்த நிகழ்வில் தி.மு.க.வின் அயலக அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, தலைமை கழகச் செய்தி தொடர்புக்குழு இணைச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் ராஜாத்தி சல்மா, எழுத்தாளர் இமையம் மற்றும் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி திரு.அ.முகமது ஜியாவூதீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி வாயிலாக உரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா,அயலக தமிழர்களின் இன்ப துன்பங்களில் திமுக அயலக அணி பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டினார்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், திராவிட இயக்கத்தின் கொள்கைகளான மொழிப்பற்று, சுயமரியாதை, பகுத்தறிவு மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், தமிழினத் தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் அரசின் சாதனைகளையும் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்தனர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அமெரிக்க அயலக தி.மு.க. தெற்கு மண்டலத்தின் அமைப்பாளர் டெக்சாஸ் பாண்டிமதி மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆனந்த் பழனிசாமி, ராம்குமார், சரவணகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்
