மெக்சிகோ, கனடாவுடன் சமரசம் செய்து கொண்டாரா அதிபர் ட்ரம்ப்?

கனடாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தவுடன், அமெரிக்காவிலிருந்து குறிப்பாக அதிபர் ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சி ஆளும் மாநிலங்களிலிருந்து கனடாவுக்கு வரும் விஸ்கி, ஆரஞ்ச் ஜூஸ், பீனட் பட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பதாக கனேடிய பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
கனடாவில் சமூகத் தளங்களில் அமெரிக்கப் பொருட்களையும் அமெரிக்க நிறுவனங்களின் சேவைகளையும் புறக்கணிக்கவேண்டும் என்று பலத்த கோரிக்கைகள் வலம் வரத்தொடங்கின. ஸ்டார்பக்ஸ் போன்ற அமெரிக்க கடைகளுக்குச் செல்வதை கனேடியர்கள் தவிர்க்கத் தொடங்கினர்.
அமெரிக்காவிலிருந்து விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படாது, மதுபானக் கடைகளில் அமெரிக்க சரக்குகளை நீக்குங்கள் என்று அண்டோரியா மாநில மதுபான விற்பனை ஒருங்கிணைப்பு ஆணையம் அறிவித்தது.
பெரும் பொருளாதாரப் போரை நோக்கி கனடாவும் அமெரிக்காவும் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சம் எழுந்த நிலையில் இன்று இரு தரப்பிலும் சமாதானக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
அமெரிக்க - கனேடிய எல்லையில் 10 ஆயிரம் வீரர்கள் எல்லையைப் பாதுகாப்பார்கள். 1.3 பில்லியன் டாலர்கள் அளவிற்கான தொகையை ஒதுக்கி எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளை கனடா தொடங்கும் என்று ட்ரூடோ அறிவித்தார். மேலும் போதைப் பொருள் கடத்துபவர்களை தீவிரவாதிகள் என அறிவிப்போம் என்றும் கூறினார். அதிபர் ட்ரம்ப் உடன் இது குறித்துப் பேசியதாகவும் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கனடா பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பை 30 நாட்களுக்கு தள்ளிவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மெக்சிகோ அதிபர் க்ளாடியா ஷெய்ன்பாமும் இதே போல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 10 ஆயிரம் கூடுதல் வீரர்கள் எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். போதை மருந்து தடுப்பு நடவடிக்கைகாக இவர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள். அமெரிக்காவிலிருந்து கனரக ஆயுதங்கள் மெக்சிகோவுக்கு செல்வதை அமெரிக்கா தடுக்கும். இது குறித்து அதிபர் ட்ரம்ப் உடன் பேசிய பிறகு கூடுதல் வரிவிதிப்பு 30 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.
கனடா பிரதமர் ட்ரூடோ, மெக்சிகோ அதிபர் க்ளாடியா ஆகிய இருவருடைய அறிக்கையையும் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. மெக்சிகோ, கனடாவின் நடவடிக்கைகள் அதிபர் ட்ரம்ப் -க்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நேர இருந்த பெரும் சேதத்தை தடுத்தும் உள்ளது.
சீனாவுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று இரவு அமெரிக்க நேரப்படி அமலுக்கு வர உள்ளது என்பதுவும் குறிப்பிடத் தக்கது.