முதல் நாளே நாட்டை விட்டு வெளியேற்றுவேன்! ட்ரம்ப் சொன்னதை செய்ய விடுவார்களா?
சமீப கால வரலாற்றில் கடும் போட்டி நிலவிய 7 மாநிலங்களிலும் வெற்றி வாகை சூடிய அதிபர் என்ற பெருமையுடன் பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேடைகளில் முழங்கி வருகிறார்.
ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்ற உடனேயே சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று மீண்டும் கூறியுள்ளார் ட்ரம்ப். ஆனால் சொன்னதை அவரால் செய்ய முடியுமா என்ற விவாதங்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளது. நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைக்கு ICE( Immigration and Customs Enforcement) என்ற ஒன்றிய அரசின் துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் பெரும்பாலும் பெருநகரங்களில் தான் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நகரங்களில் நகராட்சி மற்றும் மாநில அதிகாரம் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வசம் உள்ளது. அந்தந்த நகரங்களில் போலீசார் ஒத்துழைப்பு இல்லாமல் ICE அதிகாரிகளால் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை கண்டறிவது இயலாத ஒன்றாகும்,
ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்யும் மாநில ஆளுநர்கள், மாநகராட்சி, நகராட்சி மேயர்கள் ட்ரம்பின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர். ஆனால் ட்ரம்ப் தரப்பிலிருந்து இந்த ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. என்ன நடக்கும் என்று நாடே எதிர்பார்க்கும் அளவுக்கு இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.