டல்லாஸ் புறநகர்  ஷாப்பிங் மாலில்  பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு! 9 பேர் பலி ?

 
Allen TX

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் மாநகரத்தின் புறநகர் பகுதியான அலன் நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

வடக்கு டெக்சாஸின் டல்லாஸ் மாநகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் அலன் நகரில் உள்ள அலன் ப்ரீமியம் அவுட்லெட் மால் மிகவும் பிரபலமானது. இந்தியர்கள் ஷாப்பிங் செல்லும் இடங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். வார இறுதியின் சனிக்கிழமை என்பதால் இங்கு கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாகும்.

சனிக்கிழமை மதியம் 3:30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளனர்.  ஷாப்பிங் மாலில் உள்ள போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனடியாக 30 க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் ஷாப்பிங் மாலைச் சுற்றி வளைத்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன.

குழந்தை உட்பட 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், தீவிர சிகிச்சையில் உள்ள்னர் என்ற தகவல் வெளியாக வில்லை. போலீசார் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 5 வயது குழந்தையும் இவர்களில் ஒருவர் என்று தகவல்கள் பரவி வருகிறது.

பொதுமக்கள் போலீசார் கண்காணிப்பில் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் மாலை விட்டு வெளியேறினார்கள். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான். இரண்டாவது நபர் தப்பி ஓடிவிட்டான். அவனைத் தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். நடந்த சம்பவத்திற்காக அலன் நகர மேயர் கென் ஃபல்க் ஐ தொடர்பு கொண்டு பேசிய டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபட், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தேவையான அனைத்துத் துறையினரும் நகர அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடைசியாக கிடைத்த தகவலின் படி துப்பாக்கிச் சூட்டில் ஒருவனே ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நபர் இல்லை எனவும் அவன் தப்பிவிட்டான் என்ற தகவலும் மறுக்கப்பட்டுள்ளது.

 

 

From around the web