மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் கூட்ட நெரிசல்.. 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

 
Madagascar

மடகாஸ்கரில் உள்ள மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் வருகிற செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் பரியா என்ற தேசிய மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

Madagascar

 இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர். திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தின் காவலாளிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நெரிசலில் சிக்கி 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். மேலும் 80 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் 11 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


இதனை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் சே உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி கேட்டு கொண்டார் என அல் ஜசீரா தெரிவித்து உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மடகாஸ்கரின் மகாமசினா மைதானத்தில் இதேபோன்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web