கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு.. 2023-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு!
2023-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். அந்த வகையில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை 2 பேர் பெறுகின்றனர். எம்ஆர்என்ஏ (messenger RNA) கொரோனா தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 2, 2023
The 2023 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Katalin Karikó and Drew Weissman for their discoveries concerning nucleoside base modifications that enabled the development of effective mRNA vaccines against COVID-19. pic.twitter.com/Y62uJDlNMj
இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலமாக நோபல் பரிசு அணிவகுப்பு தொடங்கியுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு அக். 3-ம் தேதியும், வேதியியலுக்கான விருது அக். 4-ம் தேதியும், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான பரிசுகள் முறையே அக். 5, 6 மற்றும் 9-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.