ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் மோதல்.. 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தினார் அதிபர் ட்ரம்ப்!!

அதிபர் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக பதவியேற்ற பிறகு தடாலடியாக பல்வேறு செயல்களைச் செய்து வருகிறார். சட்டப்பூர்வமற்ற குடியேறிகளை வெளியேற்றுவது, இறக்குமதிப் பொருட்களுக்கு வரி, அண்டை நாடான கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன் என்ற சர்ச்சைப் பேச்சு என நாள்தோறும் ஏதாவது ஒரு பகீர் செய்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.
தற்போது அமெரிக்காவின் பிரபல உயர்கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு ஒன்றிய அமெரிக்க அரசு தர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
முன்னதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் DEI(Diversity Equity Inclusion) திட்டத்தைக் கைவிட வேண்டும் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவுக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியிருந்தார் அதிபர் ட்ரம்ப். இது அரசியலமைப்பு தந்த அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்று பல்கலைக் கழகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிதியை ரத்து செய்துள்ளார் ட்ரம்ப்.
அதிபர் ட்ரம்ப் பின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளது ஹார்வர்ட் பல்கலைக்கழகம். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு அரசியலமைப்பு சட்டச்சிக்கல் வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ளது.
இதே ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தான் உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.