24வது மாடியில் இருந்து குதித்து கோவை வாலிபர் தற்கொலை.. தைவானில் நடந்த சோகம்!

 
Taiwan

தைவானில் கோவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் 24 வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (63). இவரது மகன் ராகுல் ராம் (27). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எம்எஸ் மற்றும் பிஎச்டி படிப்பதற்காக தைவான் நாட்டில் உள்ள தைபே பகுதிக்கு சென்றார். பின்னர், அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

dead-body

இந்த நிலையில், ராகுல் ராம் தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியில் இருந்து குதித்து கடந்த (நவம்பர் 14) தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலை நேற்று முன்தினம் தைவான் நாட்டு போலீசார் பஞ்சலிங்கம், செல்வி தம்பதிக்கு தெரிவித்துள்ளனர். இதனால் ராகுல் ராமின் பெற்றோர்கள், சகோதரி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து ராகுல் ராமின் உறவினர்கள் கூறுகையில், “ராகுல் ராமுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமில்லை. கடந்த தீபாவளியன்று கூட வீட்டில் தாய், தந்தையிடம் பேசியுள்ளார். அப்போது, பெற்றோரிடம் சந்தோஷமாக பேசி உள்ளார். அவர் தான் பணிபுரிந்து வரும் இடத்திலிருந்து விலகி வேறொரு இடத்திற்கு வேலைக்கு சேர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Police

அவர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரது உடலை விரைந்து மீட்டு இந்தியா கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். இதற்கிடையே, ராகுல் ராம் உடலை இந்தியா கொண்டு வருவதற்காக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா கடிதம் எழுதி உள்ளார்.

From around the web