தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பிரபலம் தற்கொலை.. 5 மணி நேரத்திற்கு முந்தைய சிசிடிவி காட்சிகள்!

 
Kubra Aykut

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் ‘சோலாகாமி’ எனப்படும் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் கலாசாரம் இளைஞர்களிடம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த புதிய கலாசாரம் உலகளவில் பேசுபொருளானதற்கு காரணமானவர்களில், துருக்கியைச் சேர்ந்த சமூகவலைதளப் பிரபலம் குப்ரா அய்குட்டும் ஒருவர். உலகளவில் இன்னும் சட்டப்பூர்வ அங்கீகாரமற்ற இந்த திருமணத்தை, கடந்த ஆண்டு, குப்ரா அய்குட் (26) தனக்குத் தானே நிகழ்த்திக்கொள்வதாக அறிவித்தார். அவரின் அந்த திருமண சடங்கு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார்.

Kubra Aykut

இந்த நிலையில், குப்ரா அய்குட் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக கிடைத்த தகவலில், துருக்கியின் இஸ்தான்புல்லின் சுல்தான்பேலி மாவட்டத்தில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குப்ரா அய்குட், ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். 

அவருக்கு அருகில் இருந்த கடிதத்தில், “நீண்டநாள்களாக என் உடல் எடையை அதிகரிக்க முயன்றுவருகிறேன். எவ்வளவு முயன்றும் என்னால் உடல் எடையை அதிகரிக்க முடியவில்லை. என் முயற்சிக்கு நேர்மாறாக உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ எடை இழப்பு ஏற்படுகிறது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. நான் அவசரமாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 


இதையே கடைசியாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோவிலும் தெரிவித்திருந்தார். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இவரின் மரண செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web