20 அடி உயரம் பறந்து மரத்தில் மோதிய கார்.. 3 இந்திய பெண்கள் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்!
அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் 3 இந்திய பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சட் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் கிரீன்வெலி பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 3 பெண்களும் நேற்று ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். காரை ஆண் நபர் வேகமாக ஓட்டியுள்ளார். சாண்டோன் பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி 4 வழிசாலையை கடந்து 20 அடி உயரத்திற்கு பறந்து சாலையின் மறுபுறம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென் ஆகிய 3 இந்திய பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே நேருக்குநேர் கார்கள் மோதிய விபத்தில், தெலங்கானாவைச் சேர்ந்த நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் பார்சி ஆகியோர் உயிரிழந்திருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.