நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 27 இந்தியர்கள் பரிதாப பலி!
நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், “UP FT 7623 என்ற உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட அந்தப் பேருந்து மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது” என்றார். 45 போலீசார் கொண்ட குழு விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
🇳🇵Nepal: Un bus que transportaba a 43 personas se accidentó y cayó a un río, dejando al menos 27 muertos. pic.twitter.com/WwbJ5rE27Y
— Informal0ui (@loui_007) August 23, 2024
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. சித்வான் மாவட்டம் சிமல்தல் பகுதியில் நாராயண்காட் - மக்லிங் சாலையில் கடந்த 12-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்தன. அதில் இந்தியர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த மாதமும் வெள்ளத்தில் ஒரு பேருந்து சிக்கி விபத்துக்குள்ளானது அங்கு நடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இது பருவமழை காலம் என்பதால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.