உதவிபெற காத்திருந்த மக்கள் மீது குண்டுவீச்சு.. 70 பேர் பரிதாப பலி!

 
Gaza

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா அருகே உதவிப் பொருட்கள் பெற காத்திருந்த பாலஸ்தீன மக்கள் 70 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.  உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Gaza

காசா முனையின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தெற்கு பகுதியில் எஞ்சியுள்ள ரபா நகரையும் தாக்க திட்டமிட்டுள்ளது. பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால், ரமலான் மாதம் தொடங்குவதற்குள் ரபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில், காசா நகரின் அருகே உதவிப் பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் இன்று காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்தன. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகவும், 280 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்துள்ளார்.

Gaza

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தகவல் குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

From around the web