நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.. 100 பேர் பரிதாப பலி!
மொசாம்பிக்கில் காலரா பாதிப்பிலிருந்து தப்பி பிழைப்பதற்காக, கடல் வழியாக பயணித்த 100 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில், கடந்த அக்டோபரில் இருந்து காலரா நோயால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் நம்புலா மாகாணமே காலராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், நம்புலா பகுதியில் இருந்து மக்கள், காலரா பயத்தால் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், நம்புலா மாகாணத்தில் உள்ள லுங்கா பகுதியில் இருந்து மொசாம்பிக் தீவுக்கு படகில் நேற்று 130 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த பயணத்தின் போது, ஒரு இடத்தில் பாரம் தாங்காமலும், கடலின் சீற்றம் காரணமாகவும் படகு திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 100 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 26 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
#Mozambique Shipwreck makes about 100 victims in #quissanga on the island of Mozambique in the #Nampula province. There is information that shows that they fled from Quissanga (Ilha Moçambique-Nampula), because of the outbreak of #cholera that devastated that region! very sad. pic.twitter.com/dzC4WgLiK9
— José A. M. (@Muianga) April 7, 2024
இது குறித்து நம்புலாவின் மாநில செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில், “படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றதால் படகு கவிழ்ந்துள்ளது. இதில், பல குழந்தைகளும் மூழ்கி இறந்துள்ளனர். 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது” என்றார்.