நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து.. 26 பேர் உயிரிழந்த சோகம்.!

 
Nigeria

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரக்கா நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். அண்டை நகரில் விவசாய பணிக்காக இவர்கள் படகில் பயணம் செய்தனர். நைஜர் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் சிக்கித்தவித்த 30 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Nigeria

ஆனால், இந்த படகு விபத்தில் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இந்த படகில் பயணம் மேற்கொண்ட பலர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நைஜர் மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் போலோகி இப்ராஹிம் கூறுகையில், ”அம்மாநிலத்தின் மொக்வா உள்ளாட்சிப் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படகில் பயணம் செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய அணையைக் கடந்து தங்கள் பண்ணைகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.


படகில் அளவுக்கு அதிகமான மக்கள் பயணம் மேற்கொண்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதே போன்ற ஒரு சம்பவம் நைஜர் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. அதில் படகு கவிழ்ந்து சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.  

From around the web