சூறாவளிப் பிரச்சாரத்தில் பில் கிளிண்டன்.. உணவகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
முதுமையை பொருட்படுத்தாமல் கமலாவுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கமலாவுக்கு ஆதரவாக முக்கிய மாகாணங்களில் பிரச்சாரம் செய்வதற்காக ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். 1993 முதல் 2001-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு தற்போது வயது 78. முதுமையை பொருட்படுத்தாமல் கமலாவுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஜார்ஜியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கிளிண்டன் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்குச் சென்றுள்ளார். USA மேல் சட்டை அணிந்துகொண்டு ஜீன்ஸுடன் உள்ளே நுழைந்த அவரை உணவக பணியாளர்கள் உட்பட யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. குறிப்பாக உணவு ஆர்டர் செய்யும் கவுன்டரில் நின்றிருந்த பெண்மணி ஒன்றும் புரியாமல் விழித்துள்ளார்.
கிளிண்டன் அந்த பெண்மணிக்கு கை கொடுக்க தனது கையை நீட்டினார். சிறிது நேரம் கழித்து வந்திருப்பது பில் கிளிண்டன் என்று அனைவரும் உணர்ந்தனர். அந்த பெண்மணியும் கிளிண்டனை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
Bill Clinton goes to McDonalds in Georgia while campaigning for Kamala -- and the cashier thinks he's Joe Biden.pic.twitter.com/DxktlwJe5z
— Citizen Free Press (@CitizenFreePres) October 14, 2024
அந்த இடமே சற்று நேரம் சிரிப்பலையில் ஆழ்நத்து. பின்னர் கிளிண்டனுடன் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு காலத்தில் உலகிலேயே சக்தி வாய்ந்த நபராக இருந்த பில் கிளிண்டன் தற்போது யாருக்கும் அடையாளம் கூட தெரியாமல் போனது மனிதர்களை விட காலமே சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதாக அமைத்துள்ளது.