ரஷ்யாவுக்கு செக் வைத்த பைடன்! இந்தியாவுக்கு லாபமா?

10 நாட்களில் பதவியை விட்டு இறங்க வேண்டிய நிலையில் உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளார். ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான Gazprom Neft மற்றும் Surgutneftegas மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள், வணிக ஒப்பந்தங்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் 183 எண்ணெய் கப்பல்களுக்கும் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைப் பின்பற்றி உள்ளதால் இரு நாட்டுத் தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் வியாபாரம் முடங்கும், வருமானம் குறைந்தால் உக்ரைன் போர் விவகாரத்தில் உடன்படிக்கைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த நடவடிக்கையை அதிபர் பைடன் எடுத்துள்ளார். இது அடுத்து பதவிக்கு வரும் அதிபர் ட்ரம்ப்க்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது. ட்ரம்பும் அவருடைய புதிய அமைச்சர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலையையே கொண்டுள்ளனர். ரஷ்யாவை ஒரு உடன்படிக்கைக்கு கொண்டு வர ட்ரம்ப்க்கு பைடனின் நடவடிக்கை உதவியாகவே இருக்கும் என்று வெளியுறவு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு வெளி சந்தையில் எண்ணெய் வணிகம் குறைவதால் இந்தியா போன்ற நேச நாடுகளுடன் மட்டுமே எண்ணெய் வணிகம் செய்ய முடியும். இதைப் பயன்படுத்தி இந்தியா ரஷ்யாவுடன் மேலும் கூடுதல் தள்ளுபடி கேட்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு பெட்ரோல் விலைக் குறைவு மூலம் பயன் கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது.