பாரதிதாசன் பிறந்தநாள்.. ‛உலக தமிழ் நாள்’ ஆக அறிவிக்க கோரி அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் இணையவழி கருத்தரங்கள் கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் (அமெரிக்கா), கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் (பெங்களூர்), இலெமுரியா அறக்கட்டளை (மும்பை), தமிழ் அறக்கட்டளை பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம் (சென்னை), பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் (பெங்களூரு) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல்-29-ம் தேதியை ‘உலகத் தமிழ் நாள்’ ஆக அறிவிக்கவும், சென்னையில் பாரதிதாசன் ஆய்வு மணிமண்டபம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி இலெமுரியா அறக்கட்டளை மும்பையின் நிறுவனத் தலைவரும், தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் தலைவருமான சு.குமணராசன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் முன்னிலை வகிக்க, தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் செயலாளர் அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்காவின் ஒருங்கிணைப்பாளர் சு.துரைக்கண்ணன், இக்கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கி பேசினார். பாரதிதாசனின் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளை - புதுச்சேரியின் நிறுவனத்தலைவருமான கோ.பாரதி, மலேசியாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நல்லுரையாளர் மன்னர் மன்னர் மருதை, மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவர் இரா.திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
இதை தொடர்ந்து, கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கும் முத்தான மூன்று தீர்மானங்களை முன்மொழிந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - அமெரிக்காவின் தலைவர் முனைவர் பாலா.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார். இந்த தீர்மானங்களை முன்மொழிந்து உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநரும், தமிழறிஞருமான பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் விளக்கவுரை ஆற்றினார். இறுதியில், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் - பெங்களூரின் இணை ஒருங்கிணைப்பாளர் புலவார் மா.கார்த்தியாயினி நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில், தமிழ் அறிஞர்கள் முன்மொழிந்து, தமிழ் அமைப்புகள் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்ட முத்தான மூன்று தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம்-1: மொழியின்றி அமையாது உலகு என்ற அளவில் சற்றொப்ப ஏழாயிரம் மொழிகளால் நிறைந்துள்ளது இவ்வுலகம். மொழிகள் இல்லாமல் உலகில் அறிவுப் பரிமாற்றம் சாத்தியமில்லை. மொழிகள், மனிதர்களுக்கு வாய்த்த பெரும் சொத்து. அந்த வகையில், உலகின் தொன்மையான மொழிகளை மக்கள் கொண்டாடி மகிழ்வதோடு, அழிந்து போகாமல் அடுத்தத் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை அந்தந்த தேசிய இன மக்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் உலகின் தேசிய இனங்கள் பலவும் தத்தம் மொழியை உலகமறியும் அளவுக்கு மொழி நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளான அரேபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை கொண்டாடுவதற்காக சிறப்பு நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலமொழி இலக்கியத்தின் முகமாகவும், முகவரியாகவும் விளங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளும், மறைந்த நாளும் ஏப்ரல் 23-ம் நாளாக இருப்பதால், அந்நாள் ஆங்கிலமொழி நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆகஸ்ட்-12 சமற்கிருத மொழி நாளாகவும், செப்டம்பர் 14-ம் தேதி இந்தி மொழி நாளாகவும், செப்டம்பர் 14-21 இந்தி மொழி வாரமாகவும் இந்திய அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே, பிற தேசிய இனங்கள் போல உலகின் முதல் மொழியாக விளங்கும் தமிழ் மொழியின் மேன்மையைப் பாதுகாப்பது தமிழர்களின் கடமையாயாகும். அவ்வகையில் தமிழ் மொழியின் மேன்மைகளை மட்டுமல்ல, அவற்றின் சிறப்பை தொடர்ந்து பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை அடுக்கடுக்காய் திட்டங்களை வகுத்துத் தந்தவர் நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார். எனவே, அவருடைய பிறந்தநாளாம் ஏப்ரல் 29-ம் தேதியை உலகத் தமிழ் நாள் (World Tamil Day) அல்லது பன்னாட்டு தமிழ் நாள் (International Tamil Day) என அறிவிக்க வேண்டும் என உலகத் தமிழர்களின் சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அன்றைய நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழ் மக்களும் மாணவர்களும் கொண்டாடி மகிழ்ந்திடவும் தமிழ் மொழிக்காப்பு உறுதிமொழியை எடுக்கவும் இந்த அறிவிப்பு வழி வகுக்கும்.
எனவே உலகத் தமிழர்களின் பாதுகாவலனாகவும் தமிழ் மொழியின் பாதுகாவலனாகவும் தற்போது அமைந்திருக்கும் தமிழ் நாடு அரசு, ஏப்பிரல் 29-ம் தேதியை “உலகத் தமிழ் நாள்” என்ற அறிவிப்பை வெளியிட்டு இந்த ஆண்டு முதலே தமிழர்கள் கொண்டாட வகை செய்ய வேண்டும் என இத்தீர்மானத்தின் மூலம் உலகத் தமிழ் அமைப்புகளின் சார்பாக தமிழ்நாடு அரசை இந்த அறிஞர் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்-2: உலகின் முதன்மொழியாம் தமிழுக்கு மேன்மை அளித்து, அம்மொழியின் உயிர்ப்பைப் பாதுகாக்கவும் தமிழர் இன உணர்வை முதன்மை நோக்கமாகவும் கொண்டு பாடிய ஒரே கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களாவார். திராவிட இயக்கக் கோட்பாடுகள், தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் போல இதுவரை எவரும் பாடியதில்லை.
தமிழ் இலக்கியத்திற்கு தனது சிந்தனையாலும் கவிதைகளினாலும் பொன்னாரம் சூட்டிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தமிழ் இலக்கியங்களுக்கு மகுடம் சூட்டும் வகையிலும் அவருடைய இலக்கியப்படைப்புகள், உரைவீச்சுகள், ஆளுமைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் புரட்சிக்கவிஞரின் சிலை மற்றும் நூலகம் உள்ளடக்கிய மணிமண்டபம் ஒன்றினை தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை உலகத் தமிழ் அமைப்புகளின் சார்பில் இத்தீர்மானத்தின் மூலம் வேண்டுகின்றோம்.
தீர்மானம்-3: நமக்கு வாய்த்தத் தாய்மொழி தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டு தேன் தமிழ், தீந்தமிழ், நறுந்தேன் உயிர்நிகர் என 80-க்கும் மேற்பட்ட அடைமொழிகளைத் தாய்மொழியாம் நம் தமிழுக்கு அளித்து, மொழியின் உயிர்ப்பைப் பாதுகாக்கவும் தமிழர் இன உணர்வை முதன்மை நோக்கமாகவும் கொண்டு பாடிய ஒரே கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களாவார். அந்த மாமனிதரின் பிறந்த நாளை, உலகின் பிற மொழிகளைப் பேசும் பன்னாட்டு மக்கள் தத்தம் தாய்மொழி நாள்களைக் கொண்டாடி மகிழ்வது போல, உலகின் முதன் மொழியாம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு உலகின் பல நாடுகளிலும் பரந்து விரிந்து வாழும் தமிழர்களும் அவர்தாம் நடத்திவரும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளை உலகத் தமிழ் நாள் ( World Tamil Day) அல்லது பன்னாட்டு தமிழ் நாள் (International Tamil Day) ̀என கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமென அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளையும் இத்தீர்மானத்தின் மூலம் வேண்டுகின்றோம்.
மேலும், உலகின் பல முதன்மையான மொழிகளை பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் நோக்கில், பல்வேறு மொழி நாட்களை அறிவித்து பெருமை சேர்த்து வரும் ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான யுனெஸ்கோவுக்கு உலகத் தமிழ் நாள் கோரிக்கையை முறைப்படி முன்மொழிந்து, அதை வழிமொழிய ஏனைய நட்பு நாடுகளை அணுகி, அந்நாடுகளுக்கு முறையான முன்மொழிவை அனுப்பி, தேவையான ஆதரவை பெற அனைத்து வகையான அரசிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், பாவேந்தர் பேரியக்கம், திருவள்ளுவர் சங்கம்-பெங்களூரு, பாரதிதாசன் அறக்கட்டளை-புதுச்சேரி, மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மற்றும் உலக அளவில் செயல்பட்டு வரும் ஏராளமான தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.