நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர்.. இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா!

 
sheikh-hasina

வங்கதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-ல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது.    இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. 

இதையடுத்து இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தன. வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர்கள் போராட்டங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

sheikh-hasina

இந்தப் போராட்டத்தை ஷேக் ஹசீனா அரசால் முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் ராணுவம் தலையிட்டது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவ தளபதி கெடு விதித்ததால் அவர் தமது பதவியில் இருந்து விலகினார். மேலும் போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் டாக்கா இல்லத்தை முற்றுகையிட்டு சூறையாடத் தொடங்கினர்.

இதனால் வேறு வழியே இல்லாமல் உயிருக்கு அஞ்சி வங்கதேசத்தை விட்டு சகோதரி ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார். வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் தப்பிய நிலையில், அவர்களது விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் இந்திய விமானப்படை விமானம் தளத்தில் தரையிறங்கியது.


இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனா விரைவில் லண்டன் செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியாகின. வங்காளதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தி உள்ளது. மேலும், இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.