மீண்டும் கலவர பூமியாக மாறிய வங்கதேசம்.. 91 பேர் பலி!
வங்கதேசத்தில் போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-ல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கலவரத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில், இதுவரை 91 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
Police vehicle attacked and run away. At least 3 spot dead. Jamalpur, Bangladesh. 120+ dead all Bangladesh. @ABC @AJEnglish @AP @BBCWorld @ChannelNewsAsia @ChannelNewsAsia @cnni @dailystarnews @globaltimesnews @fiona_lali #SaveBangladeshiStudents #StepDownHasina pic.twitter.com/y5IqBPD0yh
— Omar Faruq (@myselfshahin) August 4, 2024
இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.