கடையில் கொள்ளை முயற்சி.. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் டீன் ஏஜ் சிறுவன் ஒருவர் இந்திய வம்சாவளி நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் சாலிஸ்பரி நகரில் உள்ள விமான நிலைய சாலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைனாங்க் பட்டேல் (36) என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இவரது கடைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கையில் துப்பாக்கியுடன் நுழைந்த சிறுவன் ஒருவன், அங்கிருந்தவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கடையில் துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு வந்து பார்த்தபோது கடையின் உரிமையாளர் மைனாங்க் பட்டேல், உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
அவரை போலீசார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மைனான்ங் பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், கொள்ளை முயற்சிக்காகவே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.