மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!
மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் வடகிழக்கு நகரமான மடெரோவில் உள்ள சான்டா க்ரூஸ் தேவாலத்தில் கடந்த ஞாயிறு (அக். 1) மதியம் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பாதிரியார் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, கான்க்ரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்புக் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயத்தின் கூரை திடீரென இடிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
A Roman Catholic Church roof in Ciudad Madero, Mexico collapsed killing 10 people, injuring 40 & trapping 30 others during Sunday mass on 1 October 2023
— Povo News (@povonewstv) October 2, 2023
The roof collapse at the Santa Cruz church happened as worshippers were receiving holy communion according to Bishop Jose… pic.twitter.com/KCyHagVus8
மெக்சிகோவில் நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு என்றாலும், விபத்து நடந்த நேரத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள்கூட எதுவும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையம் விளக்கமளித்துள்ளது.