டிரம்ப் மீது மற்றொரு பெண் பாலியல் புகார்.. அமெரிக்க தேர்தல் களத்தில் பரபரப்பு

 
Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிரம்ப் ஏற்கனவே ஜீன் கரோல் என்ற  எழுத்தாளரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக டிரம்ப்  பெண்களை பற்றி அந்தரங்கமாக பேசும் பதிவு ஒன்று ஆக்சஸ் ஹாலிவுட் டேப்ஸ்  என்று பெயரில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் சமயத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப் மீது மற்றொரு மாடல்  அழகி  பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Kamala Harris - Trump

ஸ்டேஷி வில்லியம்ஸ் என்ற அந்த மாடல் பிரபலம் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த  பேட்டியில், 1993-ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கடந்த  1992-ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நடந்த விருந்து ஒன்றில் வைத்து ட்ரம்ப்பை முதன்முதலில் சந்தித்தேன்.

அப்போது  உடனிருந்த  எனது நண்பர் எப்ஸ்டின் உடன்  பேசிக் கொண்டே என்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறினார். எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதுவும் பேசமுடியாத நிலைக்கு ஆளானேன். இந்த சம்பவம் பற்றி எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். 

Stacey Williams

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது என்று ஸ்டேஷி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இதற்கிடையே இது எதிர் போட்டியாளர் கமலா ஹாரிஸ் தரப்பின் சதிவேலை என்று டிரம்ப் தரப்பு தெரிவிக்கிறது.

From around the web