கடன் சுமையிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றிய பெண்மணி.. யார் அந்த ரூத் கோட்ஸ்மேன்?

 
New York

அமெரிக்காவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வாழ்வில் மறக்கமுடியாத உதவியை ஒரு பெண்மணி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் பிரான்க்சு நகரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பகுதி வறுமை மிகுந்த ஒரு இடமாகும். மாணவர் ஒருவருக்கு, மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆண்டொன்றிற்கு சுமார் 6,000 டாலர்கள் செலவாகும். ஆக, படித்து முடிக்க, மொத்தம் சுமார் 2 லட்சம் டாலர்கள் செலவாகும். பெரும்பாலும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுத்தான் படிக்கிறார்கள். அல்லது, அவர்களுடைய பெற்றோர் கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். எப்படியும் படித்து முடித்தும் கடனுடனேயே சிறிது காலத்தை கடத்தும் ஒரு நிலை மாணவ மாணவியருக்கு உள்ளது.

இந்நிலையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது உரையாற்றிய பெண்மணி ஒருவர், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பைக் கேட்ட மாணவ மாணவியர் துள்ளிக் குதித்துவிட்டார்கள். சிலர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. சிலர் தங்கள் நண்பர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழத் துவங்கினார்கள்.

இனி இந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அதாவது, இப்போது படித்துக் கொண்டு இருப்பவர்களும், இனி கல்லூரியில் சேர்பவர்களும், கல்விக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பைத்தான் வெளியிட்டார் அந்தப் பெண்மணி. அதற்காக அவர் அந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு பில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கியுள்ளார். அந்த தொகை மிகப்பெரிய ஒரு தொகை என்பதால், அதற்கு பெரிய அளவில் வட்டியும் வரும் என்பதால், நீண்ட காலத்துக்கு அது மாணவ மாணவியருக்கு அட்சய பாத்திரம்போல் அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கப்போகிறது.

Ruth Gottesman

அந்தப் பெண்மணியின் பெயர் ரூத் கோட்ஸ்மேன் (93). அவர் அந்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். குழந்தைகளின் கற்றல் குறைபாடு தொடர்பில் பல ஆய்வுகள் மேற்கொண்டதுடன், பல உதவிகளும் வழங்கியுள்ளார் ரூத். தற்போது, அந்த மருத்துவக் கல்லூரியின் அறங்காவலர் ஆணையத்தின் தலைவர் முதல் பல்வேறு பொறுப்புகள் வகித்து வருகிறார்.

இந்நிலையில், இதுவரை செய்த உதவிகள் போதாதென, இப்போது மாபெரும் உதவி ஒன்றை வழங்கியுள்ளார். ரூத், பிரபல வால் ஸ்ட்ரீட் என்னும் நியூயார்க் பங்குச் சந்தையின் முதலீட்டாளரான டேவிட் ‘சாண்டி’ கோட்ஸ்மேன் என்னும் கோடீஸ்வரரின் மனைவியாவார். தம்பதியர் 72 ஆண்டுகள் இணைபிரியா தம்பதியராக வாழ்ந்துவந்த நிலையில், ரூத்தின் கணவரான டேவிட், 2022-ம் ஆண்டு காலமானார்.

தான் மரணமடையும் முன், இந்த பணத்தை உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதற்காக செலவிடு என்று கூறியிருந்தாராம் டேவிட். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், டேவிட் மரணம் அடையும்போது, அவரது சொத்து மதிப்பு, 3 பில்லியன் டாலர்கள். அதாவது, தங்கள் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை ரூத் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும், இப்படி தான் ஒரு உதவியை வழங்கும் வகையில் தன்னிடம் இவ்வளவு பணத்தைக் கொடுத்துச் சென்ற தன் கணவருக்கு தான் நன்றியுடையவராக இருப்பதாகத் தெரிவிக்கிறார் ரூத்.

ரூத் தங்களுக்கு செய்துள்ள உதவிக்கு தாங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக கண்ணீர் மல்கத் தெரிவிக்கும் மாணவர்கள், அவர் இந்த உதவியை செய்ததால், தாங்களும் தங்கள் பெற்றோரும் பெரும் கடனிலிருந்து தப்பியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

இன்னொரு விசயம், மருத்துவம் படிக்க ஆசை இருந்தும், பணம் இல்லாததால் வேறு பக்கம் திரும்பும் கட்டாயத்திலுள்ள மாணவ மாணவிகள், புலம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் உட்பட, ஏழ்மையிலிருக்கும் பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவியர் இனி இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பை ரூத் ஏற்படுத்தியுள்ளார் என்கிறார்கள் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள்.

From around the web