இஸ்ரேல் ராணுவ துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க இளம்பெண் பலி.. வெள்ளை மாளிகை கண்டனம்

 
Israel

இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பெண் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. 

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை இஸ்ரேல் மீட்டுள்ளது. ஆனால், 108 பேர் இன்னும்  பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

gun

இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா்.

சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றவர். சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

Israel

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. அமெரிக்க குடிமகன் ஒருவரின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைக் கேட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோல் துருக்கி அரசும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாளாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினர்.

From around the web