தமிழில் AI தொழில்நுட்ப மேம்பாடு..சிங்கப்பூர் அரசு - அமெரிக்க கல்வி நிறுவனம் ஒருங்கிணைந்த செயல்திட்டம்!!

 
Eduright

எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்-ன்  தயாரிப்பான Grok AI தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, Grok AI பயன்படுத்தி தமிழில் கேட்கப்படும் அரசியல் சமூகக் கேள்விகளும் அதற்கான தொடர் பதில்களும் சமூகத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ் அப்பில் வரும் பல்வேறு தகவல்களின் உண்மைத் தன்மையை Grok AI ஓரிரு நொடிகளில் தெரியப்படுத்தி  விடுகிறது. 

Grok AI போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் பின்னால் Large Language Model (LLM) எனப்படும் பெரு மொழிப் போன்மம் தொழில்நுட்பம் மற்றும் தகவல் கட்டமைப்பு உள்ளது. இது எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, தரவுகள் சேமிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வருகிறதோ, அவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் பயனர்களின் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். மனிதர்களைப் போல் பல்வேறு தகவல்களை  உள்வாங்கி சிந்தித்து ஆராய்ந்து புதிய பரிமாணத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்தாற் போல் பதில்களாகத் தரும் வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பம் இது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் வளங்கள் அனைத்தையும் ஏஐ தொழில்நுட்பத்தில்  உள்வாங்கி, புதிய புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிகோலாக அமைக்க வேண்டும் என்றால் எவ்வளவு திட்டமிடலும் செயலாக்கமும் தேவைப்படும் அல்லவா!

இத்தகைய முயற்சியில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் எட்யுரைட் அறக்கட்டளையும் சிங்கப்பூர் அரசின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துணை அதிபரின் துறையின் கீழ் செயல்படும் AI சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் (LLM) உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். AI சிங்கப்பூர்(AISG) அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக AISG-இன் தென்கிழக்கு ஆசிய மொழிகளின் பெரு மொழிப் போன்மத்தில் (LLM) தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த திறன்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், எட்யுரைட் அறக்கட்டளையின் தலைவர்  கீர்த்தி ஜெயராஜ் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் சென்று AISG பிரதிநிதிகளை சந்தித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்தக் கட்டமாக,  மார்ச் 5ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

“தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான AI தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்குவதில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியப் படிநிலையாக அமையும்” என்று எட்யுரைட் அறக்கட்டளை தலைவர்  கீர்த்தி ஜெயராஜ்  குறிப்பிட்டார்.

திறந்தநிலை மூலங்களைச் (Open source) சேகரித்தல், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெற்று ஒருங்கிணைத்தல், SEA-LION மாதிரியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டு பயிற்சி அளித்தல் ஆகியவை உடன்படிக்கையின் முக்கிய நோக்கங்கள் ஆகும். சேகரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுத் திறந்தநிலை மூல உரிமையின் கீழ் பொதுவெளியில் வெளியிடப்படும்.

தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் அதன் பயன்பாட்டிற்கும் AI தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள, எட்யுரைட் அறக்கட்டளை AI சிங்கப்பூர் அமைப்புகளின் இந்தக் கூட்டு முயற்சி மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

இத்தகைய முன்னோடி இலக்கில் பங்கெடுக்க தமிழ் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எட்யுரைட் அறக்கட்டளையும் AI சிங்கப்பூர் அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளனர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பும் தன்னார்வலர்கள் EduRight Foundation இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது info@eduright.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.