அமெரிக்காவில் 128 ஆண்டுகளுக்கு பிறகு கைதியின் உடல் அடக்கம்.. நடந்தது என்ன?
அமெரிக்காவில் சிறைக்கைதியின் உடலானது 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரில் உள்ள ரீடிங் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான ஒருவர் சிறையில் கடந்த 1895-ம் ஆண்டு உயிரிழந்தார். இவர், சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை வெளியில் சொல்லாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார்.
இதனால், இவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை. இதனையடுத்து, உடலை வாங்கி செல்ல யாராவது வரும்வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றினர். பின்பு, உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.
பின்னர், இவருக்கு ஸ்டோன்மேன் வில்லி என்று பெயரிடப்பட்டு 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் இவரது உடல் வைக்கப்பட்டது. இதனை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்க வந்தனர். இந்நிலையில், ஸ்டோன்மேன் வில்லியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதையடுத்து பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, ஸ்டோன்மேன் வில்லி ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், நியூயார்க்கில் வசித்தார் என்றும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இவரது தந்தை பணக்காரர் என்பதால் திருட்டு வழக்கில் கைதான போது உண்மையான பெயரை சொல்லவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.