கனடாவில் கோர விபத்து.. அண்ணன் தம்பி உட்பட 3 இந்தியர்கள் பலி!
கனடாவில் நிகழந்த கோர விபத்தில் அண்ணன் தம்பி உள்பட 3 இந்தியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், இந்தியர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. அவற்றில் ஒன்றில், ரீத்திக் சாப்ரா (23), அவரது தம்பியான ரோஹன் சாப்ரா (22) மற்றும் அவர்களுடைய நண்பரான கௌரவ் ஃபாஸ்கே (24) ஆகியோர் பயணித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த கார், மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் அப்பளமாக நொறுங்க, காருக்குள் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகே சேதமடைந்த மற்றொரு காரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசயம் என்னவென்றால், விபத்தில் பலியான ரீத்திக்குக்கு, அன்றுதான் பிறந்தநாள். தனது 23வது பிறந்தநாள் அன்றே அவர் பலியாகிவிட்டார்.
நள்ளிரவில் அவர்களும், மற்றொரு காரில் பயணித்த சிலரும், கார் ரேஸில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது. கார் ரேஸின்போது கார்கள் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தின் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீத்திக்கும் ரோஹனும் பணி செய்துவந்த முடிதிருத்தும் கடையின் உரிமையாளரான காஞ்சன் கில்லில் மனைவியான ஆஷா ராணி, அந்த இளைஞர்கள் வெளியே செல்லும்போதெல்லாம், கவனமாக கார் ஓட்டுங்கள், அடுத்த நாள் உங்களை பார்க்கவேண்டும் என்றே எச்சரிப்பாராம்.
மற்றொரு சோகம் என்னவென்றால், ரோஹனுக்கு சமீபத்தில்தான் திருமணமாகி உள்ளது. விரைவில் தனது மனைவியை கனடாவுக்கு அழைத்துவர இருந்த நிலையில், அவரும் அவரது சகோதரரும் பலியாகிவிட்டார்கள். பிள்ளைகள் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோரின் கனவுகளும், கணவர் தன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வார் என்னும் ஆசையிலிருந்த இளம் மனைவி ஒருவரின் கனவுகளும், கனவுகாணத் துவங்கும் முன்பே கலைந்துபோய்விட்டன.