தாய்லாந்தில் சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த பெண்... அதிர்ச்சியில் உறவினர்கள்!

 
Thailand

தாய்லாந்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட இறந்த பெண் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் உடான் தனியைச் சேர்ந்தவர் சடார்ன் ஶ்ரீபொண்லா (49). இவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. கிடைத்த அறிக்கைகளின் படி, கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் மூச்சு நின்று போய் இறந்து விட்டதாக தெரியவந்தது.

இப்பெண்மணியின் தாயாரான மாலி என்பவர் தன்னுடைய மகளின் உயிரிழந்த செய்தியை உறவினர்கள் அனைவருக்கும் கூறியுள்ளார். ஏற்கனவே கல்லீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த தன்னுடைய மகள் உயிரிழந்து விட்டதாக அனைவருக்கும் செய்தி அனுப்பியுள்ளார்.

Thailand

உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் என்னுடைய மகளின் கடைசி நேரத்தை குடும்பத்தோடு செலவழிக்க விரும்புகிறோம் என்று கூறிய மாலி தன்னுடைய மகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் “துரதிஷ்டவசமாக வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே எனது மகள் உயிரிழந்து விட்டாள்” என அவரின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

புத்த மத வழக்கப்படி அவரது குடும்பத்தார் ஒரு சவப்பெட்டியில் அவரது உடலை வைத்து, இறுதி சடங்கிற்காக கோவிலுக்கு எடுத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் அவர்கள் சென்ற வேனை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக இறந்த சடலங்களை வைத்து பூஜை செய்யும் பாடுங் பட்டானா கோவிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அந்த இடத்தில் தான் சடலத்தை இரவு முழுவதும் வைத்து இறுதி சடங்குகளை செய்வார்களாம்.


கோவிலுக்கு செல்லும் வழியில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அந்த இறந்த பெண்மணி திடீரென தனது கண்களைத் திறந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியில் அலறிய அவரது உறவினர்கள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சற்று ஆசுவாசமடைந்துள்ளனர். தனது மகளின் இந்த அதிசயத்தக்க உயிர் பிழைத்த நிகழ்வை அவரது தாய் மாலி அனைவரிடமும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

பிறகு உடனடியாக ஸ்ரீபொண்லாவை அவரது தாயும் மற்ற உறவினர்களும் அங்குள்ள பான் டேங்க் பிரின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். தற்போது மருத்துவரின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த பெண்மணி உயிர் பிழைத்தது அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் வியப்பை உண்டாக்கியுள்ளது.

From around the web