அடுத்த அதிர்ச்சி.. லிபியாவை புரட்டிப்போட்ட புயல்.. 2 ஆயிரம் பேர் பலி

 
Libya

லிபியாவில் புயல் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதிகளை டேனி புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால் டெர்னா நகரில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாகக் கிழக்கு லிபியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லிபிய தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி கூறுகையில், “டெர்னா நகரம் பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்குள்ள அணைகள் இடிந்த நிலையில், அங்குப் பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தால் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Libya

கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அங்கே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு மக மோசமாக இருக்கும் நிலையில், சர்வதேச நாடுகளின் உதவியை லிபியா கோரியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “டெர்னாவில் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. அங்கே பல வீடுகள் அப்படியே சரிந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அணை உடைந்ததாகவே தெரிகிறது. இரவு தூங்கிய போது கனமழை மட்டுமே இருந்தது. ஆனால், காலை எழுந்து பார்க்கும் போது வீடு முழுக்க தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது. வீடுகளை விட்டு வெளியே வரவே கடும் சிரமம் இருந்தது. பல இடங்களில் 10 மீட்டர் வரை நீர் இருந்தது” என்றார்.

Libya

டெர்னாவின் மேற்கில் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கிறது. அங்குக் கட்டிடங்கள் அனைத்தும் நீரால் சூழ்ந்துள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட தளமான சைரீன் இருக்கும் சூஸ் மற்றும் ஷாஹத் நகரங்களிலும் பாதிப்பு மிக மிக மோசமாக இருக்கிறது. பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் மூன்று நாட்கள் துக்கத்தை அறிவித்துள்ளது.

From around the web